ADDED : செப் 01, 2023 12:52 AM
சென்னை:நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில், ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, மூன்று மாத ஓய்வூதியம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
தொழிலாளர் நலத்துறை கீழ், 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இவற்றில் பதிவு செய்து, 60 வயதை எட்டியவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, கடந்த மாதம் 24ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அப்போது, ஓரிரு நாட்களில், ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்கான ஓய்வூதியத் தொகை வழங்க, அரசு, 50 கோடி ரூபாய் ஒதுக்கியது.
அந்த நிதியில் இருந்து, மே மாதம் வரை, மூன்று மாதங்களுக்கான நிலுவை தொகை வழங்கும் பணி நடந்து வருகிறது. இனி மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
