அடுக்கடுக்கான குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
அடுக்கடுக்கான குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
ADDED : ஜன 03, 2025 07:15 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,
விழுப்புரத்தில் மா.கம்யூ., கட்சியின் 24வது மாநில மாநாடு இன்று (3ம் தேதி) துவங்கி, 5ம் தேதி வரை நடக்கவுள்ளது. அகில இந்திய மாநாடு வரும் ஏப்., 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. மாநாட்டில் தமிழக மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படும்.
தமிழக மக்களின் வாழ்வு நெருக்கடியில் உள்ளது. வேலையின்மை, சமூக பாதுகாப்பின்மை, பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை, வன்முறை அடுக்குமுறை, பெண்கள், குழந்தைகள் மீதான அடுக்கடுக்கான குற்றங்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றம் தேவை என்பதால் இடதுசாரி கொள்கைகளை நோக்கி மக்கள் திரும்ப, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த மாநாட்டில் ஆலோசிக்க உள்ளோம்.
அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அது தொடர்பான எப்.ஐ.ஆரை வெளியிட்டது அந்த மாணவிக்கு இழைத்த பெரும் கொடுமையாகும். மத்திய தகவல் முகமை மீது கூட தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் இல்லையென்றால் யார் பொறுப்பேற்பது. இங்கு ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
மாணவி பாதிக்கப்பட்ட விஷயத்தில் உடனே புகார் கொடுக்காமல் இருந்ததற்கு, கவர்னர் தான் காரணம். தமிழக போலீசார், ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காமல் கைது செய்வது தேவையற்றது. அரசியல் சாசன உரிமைக்கு அப்பாற்பட்டது ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

