தி.மு.க., ஆட்சி போக வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர்: அர்ஜுன் சம்பத்
தி.மு.க., ஆட்சி போக வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர்: அர்ஜுன் சம்பத்
ADDED : நவ 23, 2024 07:38 PM
ராணிப்பேட்டை:''மஹாராஷ்டிராவில், மூன்றாவது முறையாக பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவதற்கான காரணம் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் தான்,'' என, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
ஹிந்து மக்கள் கட்சியின், ஹிந்து தர்ம சேவை அறக்கட்டளை சார்பில், வேலுார் கோட்டத்திற்கான சேவா கேந்திரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் வந்தது. இதை, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மஹாராஷ்டிராவில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ., தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் வெற்றி பெற்றுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. வயநாட்டிலே பிரியங்கா வெற்றி பெறுவது, 'வோட் ஜிகாத்' தான் காரணம். வரும், 2026 தேர்தலில், தமிழக அரசியல் சூழ்நிலை என்பது, 5 முனை போட்டியாக இருக்கும். தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க.,- பா.ஜ.,- த.வெ.க.,- நாம் தமிழர் கட்சி என இருக்கும்.
லஞ்ச ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருட்களால் தி.மு.க., ஆட்சி போகவேண்டுமென்று மக்கள் உறுதியாக உள்ளனர். 2026 தேர்தலில் தமிழகத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அதே நேரம் பா.ஜ., ஆட்சியமைக்க வேண்டும் என்பது மக்கள் முடிவு.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்கள், பிராமணர்களுக்கு ஆதரவாக யார் கருத்து சொன்னாலும், அவர்களை சிறையில் அடைக்கும் போக்கு சரியானதல்ல. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இதை எதிர்கொள்ளும் வகையில் வரும், 8ம் தேதி, திருச்சியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பிராமண வழக்கறிஞர்கள், சனாதான வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்த போகிறோம்.
இவ்வாறு கூறினார்.

