ADDED : அக் 25, 2024 12:45 AM

தங்கம் விலை உயர்ந்த நிலையிலும்,தீபாவளியை முன்னிட்டு, நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனால், நகைக்கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது.
இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தங்கம் ஆபரணமாக பயன்படுவதுடன், உடனடி பணத்தேவைக்கு கை கொடுக்கிறது. இதனால், தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், ஒவ்வொருவரும் 2 கிராம், அரை சவரன்,ஒரு சவரன் என, தங்களிடம் உள்ள பணத்திற்கு ஏற்ப வாங்கி வருகின்றனர்.
தீபாவளி, அக் ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கையால் பலரும், அந்த நாட்களில் நகைகளை வாங்குகின்றனர். சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் எப்போதும்இல்லாத வகையில், தற்போது, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, 58,000 ரூபாயை தாண்டியுள்ளது.
வரும், 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,நகைக்கடைகளும் பல்வேறு தள்ளுபடி, சலுகைகளை அறிமுகம் செய்துள்ளன.இதனால், தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், பலரும் நகைக்கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் தி.நகர், பிராட்வே, குரோம்பேட்டை, தாம்பரம் உட்பட, மாநிலம் முழுதும் நகைக்கடைகளில்கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
ஜெயந்திலால் சலானி, நிர்வாக இயக்குனர், சலானி ஜுவல்லரி மார்ட், தி.நகர், சென்னை: தங்கம் விலை உயர்ந்திருந்தாலும், தீபாவளியை முன்னிட்டு, தங்க நகைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். எங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புதிய வடிவில் பல்வேறு புதிய ஆபரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
'டெம்பிள், ஆன்டிக்' நகைகள்,'ஜிர்கான்' கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், 'ஜடாவ்' மற்றும், 'போல்கி' நகைகள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை, மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். எங்கள் கடையில், மேற்கண்ட நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில்,50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைர நகை விலையில், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை, 50 சதவீதம் செய்கூலியில் தள்ளுபடி. சேதாரம் வசூலிப்பதில்லை. வாடிக்கையாளர்களுக்கு, மிக விரைவாக சேவை செய்ய, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தீபாவளிக்கு கிடைத்துள்ள, போனஸ் தொகையில் பலரும், நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, முதலீடு செய்து வருகின்றனர்.
தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும், 'தந்தேராஸ்' பண்டிகைக்கு, வெள்ளி வாங்குவர். இந்த முறை வெள்ளி விலை உயர்ந்திருந்தாலும், தந்தேராசுக்கு வெள்ளி வாங்க ஆர்வமுடன்முன்பதிவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உம்மிடி அமரேந்திரன், நிர்வாக பங்குதாரர், உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்: தங்கம் விற்பனை நன்கு உள்ளது. இன்னும் தங்கம் விலை உயரும் என்ற காரணத்தால், மக்கள் நம்பிக்கையுடன் தங்கம் வாங்கி வருகின்னர். தீபாவளி தங்கம் விற்பனை மந்தமாக துவங்கினாலும், தற்போது சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
'ஆன்டிக்' நகைகள் விற்பனை அதிகம் உள்ளது; சேமிப்பு திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர். தற்போது, வைரம் விலை குறைந்திருப்பதால், வைர நகைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். செய்கூலி, சேதாரத்தில், 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.