தி.மு.க.,வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: பிரதமர் மோடி பதிவு
தி.மு.க.,வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை: பிரதமர் மோடி பதிவு
ADDED : மார் 19, 2024 12:16 PM
கோவை:கோவையில், பா.ஜ., சார்பில் நடந்த 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற பின், 'தமிழகத்தில் இனி தி.மு.க.,வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை' என, பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவையில், பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது.
சாலையின் இருபுறமும் திரண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், மலர்கள்துாவி பிரதமரை வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின், பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:
கோவை மக்கள் என் மனதை வென்று விட்டார்கள். இன்று (நேற்று) மாலை நடந்த 'ரோடு ஷோ' பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது.
எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி, தி.மு.க.,வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோவையில், கடந்த 1998ல் நடந்த குண்டுவெடிப்புகளில், நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
இவ்வாறு, பிரதமர் மோடி அதில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், 'ரோடு ஷோ' நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

