யாருக்கு என்ன பலம் என்பதை மக்கள் உணர்த்துவர்: இ.பி.எஸ்
யாருக்கு என்ன பலம் என்பதை மக்கள் உணர்த்துவர்: இ.பி.எஸ்
ADDED : மார் 09, 2024 06:19 AM

சென்னை: ''கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. பொதுவான உடன்பாடு ஏற்படும் வரை, பேச்சு நடக்கும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடனும் பேச்சு நடக்கிறது. பொதுவான உடன்பாடு ஏற்படும் வரை பேச்சு தொடரும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கட்சிகள் சேர வந்தால் தகவல் தெரிவிக்கப்படும். பா.ஜ., செல்வாக்கு அதிகரித்திருப்பதாக, பத்திரிகையாளர்கள் சொல்கிறீர்கள். யாருக்கு என்ன பலம் என்பதை மக்கள் உணர்த்துவர்.
தி.மு.க., ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர்; எல்லா இடங்களிலும் போராட்டம். அரசு கண்டு கொள்ளவில்லை.
தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், 'ஆட்சி பொறுப்பேற்றதும், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என்றார். ஆனால், செய்யவில்லை.
பா.ஜ., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., விலகி விட்டது என்பதை தெளிவாகக் கூறி விட்டோம். அவர்கள் கதவு திறந்திருப்பதாக கூறினால், நான் என்ன கூற முடியும்? எங்கள் கட்சி குறித்து தான் நான் பதில் கூற முடியும். அ.தி.மு.க., கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது. கூட்டணி, தேர்தல் நேரத்தில் அமைப்பது.
மறைந்த தலைவர்கள் குறித்து பிரதமர் பேசி உள்ளார். நல்லது செய்வதை பாராட்டுவது, நம் நாட்டின் கலாசாரம். தி.மு.க., ஆட்சியில், 8.33 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இண்டியா கூட்டணியில், தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாதபோது, பிரதமர் வேட்பாளரை எப்படி ஏற்பர்? அ.தி.மு.க., தமிழக உரிமைகளை பாதுகாக்க, தமிழகம் வளர்ச்சி பெற தேவையான நிதிகளை பெற, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.