'பாகுபாடுகளை முழுமையாக நீக்க மனதளவில் மக்கள் மாற வேண்டும்'
'பாகுபாடுகளை முழுமையாக நீக்க மனதளவில் மக்கள் மாற வேண்டும்'
ADDED : டிச 13, 2024 01:43 AM

சென்னை:''உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும். இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்குவதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திராவிட கழக நிறுவனர் ஈ.வெ.ரா.,வின் வைக்கம் போராட்ட நுாற்றாண்டு நிறைவு விழா, கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தி.க., தலைவர் வீரமணி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வாசவன், சஜி செரியன், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், தமிழக அரசின் வைக்கம் விருதை, கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநுார மஹாதேவாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பின், புதுப்பிக்கப்பட்ட வைக்கம் நினைவகம் மற்றும் நுாலகத்தை, முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்புடன், இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்கு வரலாற்று பெருமை கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் கருணாநிதி நம்முடன் இல்லையே என்ற சின்ன வருத்தம், என் நெஞ்சின் அடி ஆழத்தில் உள்ளது. வைக்கம்
போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப்போலவே இந்த நினைவகத்தையும் கம்பீரமாக, அழகியலோடு, அறிவு கருவூலமாக உருவாகி இருக்கிறது.
சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக, இந்த நினைவகம் உருவாகி இருக்கிறது. வைக்கம் போராட்டம் என்பது கேரளாவிற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் துவங்கிய பல்வேறு சமூக நீதி போராட்டங்களுக்கான தொடக்கப்புள்ளி.
நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது சமூக ரீதியாகவும், அரசியல் வழியிலும், பொருளாதார சூழலிலும் முன்னேறி இருக்கிறோம்; அது போதாது.
இன்னும் நாம் முன்னேறி போக வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது. உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம் போராட்டத்தை வேகமாக தொடர வேண்டும்.
நவீன வளர்ச்சியால், இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவை தான், அதை விட மனமாற்றமும் முக்கியம்.
யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும். அதற்காகத்தான் எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான துவக்கம்.
அந்த தொடர் வெற்றியை எல்லா துறைகளிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்; எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
'மாநிலங்களின் சுயமரியாதைக்காக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்'
கேரளாவின் கோட்டயத்தில் வைக்கம் போராட்டத்தின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்
பேசியதாவது:
கேரளா மற்றும் தமிழகம் இடையேயான ஒத்துழைப்பு, கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைக்கு சான்றாகும். இது, இரு மாநிலங்களுக்கும் இடையே நீடித்து வரும் பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஒத்துழைப்பை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், செயல்கள் வாயிலாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களின் உரிமைகள், குறிப்பாக பொருளாதார சுயாட்சி போன்றவற்றில் பிற சக்திகளின் தலையீடு அடிக்கடி இருப்பதால், இந்த ஒத்துழைப்பு மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப, கேரளா - தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படும். மாநிலங்களின் சுயமரியாதைக்காக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தேவையான ஒத்துழைப்பை, இரு மாநிலங்களும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
ஈ.வெ.ரா.,வின் வைக்கம் போராட்டத்துக்கு அப்போது, நாடு முழுதும் இருந்து ஆதரவு கிடைத்தது. பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துதல், அவர்களுக்குத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குதல், விவாகரத்து பெறுதல் போன்ற முற்போக்கான சீர்திருத்தங்களுக்காக அவரின் தலையீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது.இவ்வாறு அவர் பேசினார்.

