'போதையில்லா தமிழகம் உருவாக பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்'
'போதையில்லா தமிழகம் உருவாக பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்'
ADDED : மார் 17, 2024 03:44 AM

சென்னை : ''போதையில்லா தமிழகத்தை உருவாக்க, பா.ஜ., கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
ரங்கராஜ் பாண்டேயின், 'சாணக்யா' யு -டியூப் சேனலின் ஐந்தாம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சியில், ஆட்சியாளர்களை நோக்கி சாதாரண மக்களும் கேள்வி கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. இது, வரவேற்கக் கூடியது என்றாலும், சமூக ஊடகங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா தலைவர்களும் ஒன்று தான் என்ற எண்ணத்தை, மக்களிடம் ஊடகங்கள் விதைக்கின்றன. ஆனால், இன்று அந்த நிலை மாறத் துவங்கியுள்ளது.
கேட்பதில்லை
எல்லா கட்சிகளையும் போல பா.ஜ., அல்ல. எல்லா தலைவர்களையும் போல பிரதமர் மோடி அல்ல. நமக்கான தலைவர் மோடி என்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.
பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மற்ற கட்சிகளிடம் கேட்பதில்லை. முடியாது என தெரிந்தும், முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்ன கட்சிகளிடம் கேள்வி கேட்பதில்லை.
லோக்சபா தேர்தல் நேரத்தில், இண்டியா கூட்டணி என்பது பொழுது போக்கு மட்டுமே. எமர்ஜென்சி காலத்தில், சட்டத்திற்கு எதிராக பார்லிமென்ட் பதவிக்காலத்தை நீட்டித்து, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை சேர்த்தனர். அதை, மூலமந்திரமாக்கி அரசியல் நடத்துகின்றனர்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் பெரும்பான்மை மக்களின் மதத்தை கேவலமாக பேசுகின்றனர். ஒரு மதத்தை மட்டும் டெங்கு போல, கொசு போல ஒழிப்பேன் என்கின்றனர். மற்ற மதங்களை பற்றி பேசுவதில்லை; இது, கோழைத்தனம்.
'டாஸ்மாக்' பற்றி பேசி முடிக்கும் முன், வேறொரு சரக்கை இறக்கி விட்டனர். போதையில்லா தமிழகத்தை உருவாக்க, லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசாகும். இல்லையெனில், புல்லரசாகி விடும்.
அமோக வெற்றி
லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு ஓட்டளிக்கும் முதிர்ச்சி தமிழகத்தில் இருந்தது. இப்போது, தமிழகத்தில் தேசிய கட்சி பா.ஜ., தான். எனவே, ஆன்மிகத்தையும், தேசியத்தையும் முன் வைக்கும் பா.ஜ., கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேசிய த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், ''பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. எப்போதும் தேசிய சக்திகளுக்கு ஆதரவளிக்கும் தமிழக மக்கள் இந்த முறை, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும்,'' என்றார்.

