வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி
வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி
ADDED : மார் 15, 2024 02:06 AM

சென்னை: 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்க சான்றிதழ் மற்றும் பிரதி ஆவணங்களை, ஆதார் இணைப்பு பிரச்னை காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் வில்லங்க சான்றிதழ், பிரதி ஆவணங்கள் பெறுவதும் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, 1975 முதலான வில்லங்க சான்றிதழ்கள் மற்றும் பிரதி ஆவணங்களை, ஆன்லைன் முறையில் பெற முடியும். இதற்காக, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, ஓரிரு நாட்களில் வில்லங்க சான்றிதழ், பிரதி ஆவணங்கள் 'இ - மெயில்' வாயிலாக அனுப்பப்படுகின்றன. இதன்படி, இ - மெயில் வாயிலாக பெறும் ஆவணங்களை, மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்பட பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், யார் யாருடைய சொத்து குறித்த பிரதி ஆவணங்களை பெறுகின்றனர் என்பதை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து ஆன்லைன் முறையில் வில்லங்க சான்றிதழ், பிரதி ஆவணங்கள் வழங்கும் நடைமுறையில், தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த பின்னணியில் வில்லங்க சான்றிதழ், பிரதி ஆவணங்கள் முறையாக வந்தாலும், கணினியில் அதை திறப்பதிலும், அச்சு பிரதி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கட்டணம் செலுத்தி வாங்கிய ஆவணங்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்லைன் முறையில் வில்லங்க சான்றிதழ், பிரதி ஆவணங்கள் வழங்குவதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரரின் ஆதார் எண் விபரங்கள் கேட்கப்படுகின்றன.
இந்த விபரங்கள் சரியாக இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில், வழங்கப்படும் வில்லங்க சான்றிதழ்கள், பிரதி ஆவணங்களை பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை.
ஆனால், ஆதார் விபரங்களை உறுதிப்படுத்துவதில் பிரச்னை இருக்கும் நபர்களுக்குத் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

