ADDED : பிப் 16, 2024 01:36 AM

ஆடிட்டரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.ஆர்.வெங்கடேஷ் கூறியதாவது:
'தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் நடைமுறை சட்டவிரோதமானது. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை, வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகள் யாரிடம் இருந்து, எவ்வளவு நன்கொடை பெறுகின்றன என்பது, ஓட்டளிக்கும் மக்களுக்கு தெரிய வேண்டும்; அது தான் ஜனநாயகம். ஆனால், 2017 - -18ல் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.
வங்கி காசோலை கொடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய ஒருவரிடமிருந்து, பணம் கொடுத்து வேறொருவர் வாங்கலாம். அவரிடம் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால், நன்கொடை கொடுத்தவர்கள், அதாவது தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியாது.
'தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை கொடுத்தோர் குறித்த விபரங்களை, தேர்தல் ஆணைய இணையதளத்தில், ஏப்ரல் 13க்குள் வெளியிட வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
இதனால், யார் யார், எந்தெந்த கட்சிகளுக்கு, எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது தெரிந்து விடும். இது, ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.