தி.மு.க.,வின் போலி நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தி.மு.க.,வின் போலி நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
ADDED : ஜூலை 19, 2025 05:15 PM

சென்னை: தி.மு.க.,வின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்பப் போவதில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
அவரது அறிக்கை:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வரும், தி.மு.க.,தலைவருமான ஸ்டாலின் தனது எம்.பி.,க்களை கூட்டி, 11 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாக வழக்கம்போல வெறுப்பு அரசியல் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
கடந்த மே மாதம் டில்லியில் நடத்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதாக கூறி, இவரது தந்தை, மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் முதல் தமிழகத்தை ஏமாற்றி வருகிறது. கூவம் ஆறு சுத்தப்படுத்தும் திட்டத்தைக் காட்டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்டனர்.
ஆண்டுகள் பல உருண்டோடினாலும், தமிழக மக்களுக்கு நாற்றமடிக்கும் கூவம் ஆறு தான் மீச்சம். கோடிக்கணக்கான ரூபாப் பணத்தை சுருட்டியனர்கள் இன்று வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்சாரம் போட முடியுமா என்று அலைகின்றனர்.
ஓவ்வொரு பிரச்சனையிலும் மத்திய அரசிடம் கேட்டு விட்டோம் செய்யவில்லை என்று பழிபோட்டு தப்பி- த்துக் கொள்ளலாமென முதல்வர் என்னுகிறார். ஆனால். தமிழக மக்கள் அவரிடம் கேட்கும் கேள்வி இது தான்.
தமிழகத்தை ஆட்சி செய்ய தி.மு.க.,வை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது எதனால்? எதுவும் செய்ய முடியாத நீங்கள் தேர்தலில் நிற்பது எதற்காக? வெற்றி பெறுவது எதற்காக? ஆட்சி அதிகாரத்தை கைபற்றி குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவா?
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று வழக்கம்போல் தீர்மானம் கொண்டு வந்துள்ள நீங்கள், எந்த நிதி தரவில்லை என கூறுங்கள் என்று மந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலமுறை கேள்வி கேட்டு விட்டார். ஆனால் அவர்களிடம் பதில் இல்லை. பிரதமர் நரேந்திரு மோடி தலைமையிலான மத்திய அரசு. தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. ஆனால் 2004 முதல் 2014 வரை தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு தமிழகத்திற்கு செய்தது என்ன? தி.மு.க.,விற்கு அதைக் கூற திரானி அருக்கிறதா?
அதுமட்டுமல்லாமல், தற்போது மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்ற 11 லட்சம் கோடி ரூபாயில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன? முதல்வரும் மாவட்டம் தோறும் வாரிசு அரசியலை வளர்த்து குட்டி ஜமீன் தார்களாக வலம் வரும் தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் சேர்ந்து தமிழகத்தை சூறையாடிகொள்ளையடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டுகின்றனர். இது தான் இவர்கள் தமிழகத்திற்கு செய்து வருவது மக்கள் நலப்பணியா?
மக்கள் நலத்திட்டங்களை பற்றி பேச தி.மு.க.,விற்கு எந்தத் தகுதியும் இல்லை. ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும். கீழடி ஆய்வை மத்திய அரசு மறுக்கிறது என வழக்கமான பல்லவியை பாடி எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை திணித்து, பின்னர் மஹாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்கு பா.ஜ., பணிந்ததாக கூறுகிறார்.
“நாங்கள் ஹிந்தி யை எதிர்க்கவில்லை, தமிழக முதல்வர் விவரத்தை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் என இவர்களது இண்டி கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே கட்சியினர் கூறினர்.தோழமை கட்சியினரே முகத்தில் கரியை பூசிய பிறகும், தென்னிந்தியா முழுவதும் ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதாக புரட்டு வேலை செய்த ஸ்டாலின், தனது முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்ள முடியும்?
கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது பற்றியெல்லாம் ஸ்டாலின தனது வாழ்நாளில் பேசக் கூடாது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இவரது தந்தை கருணாநிதி , காங்கிரஸுடன் கைகோர்த்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இந்த வஞ்சக செயலுக்காக ஸ்டாலின் தமிழக மீனவர்களிடம் இதுவரை மன்னிப்பு கேட்டதுண்டா?
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். வான் புகழ் வள்ளுவனையும், அவர் வடித்த திருக்குறளையும் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. திருக்குறளை பல மொழிகளிலும் மொழி பெயர்த்து உலக தத்துவமாக்கி வருகிறார். இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட திமுக, திருக்குறளை அண்டை மாநிலங்களுக்கு கூட எடுத்துச் செல்லவில்லை. இவர்களின் கவலையெல்லாம் சொந்த குடும்பத்தை வளர்ப்பது, கோடிகளை குவிப்பது மட்டுமே.
பல ஆண்டுகளுக்கு பிறகு பைசா அளவில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் ஏழை-எளிய மக்களைப் பாதிப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின், தமிழகத்தில் மூன்று மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? ஆண்டுதோறும் மின்கட்டணத்தால் தமிழக மக்களை உறிஞ்சி வரும் தமிழக அரசு, தற்போது சிறு கடைகளை கூட விட்டு
வைக் காமல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சொந்த மாநில மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் முதல்வருக்கு, மனசாட்சி என ஒன்று இருந்தால் ரயில் கட்டணம் பற்றி பேசுவாரா?
சொந்த மாநில மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு முதல்வர், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில தகுதி கொடுக்க வேண்டும் என கோருகிறார்; பீஹார் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பற்றி பேசுகிறார். மாநிலத்தை நிர்வகிக்க திராணியற்ற பொம்மை முதல்வர் மற்ற மாநிலங்கள் மீது பரிதாபப்படுவதாக நடிப்பதை பார்த்த தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
திமுகவினரின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்பப் போவதில்லை. இந்த கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல இரண்டல்ல. மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, திமுக குடும்பம் மட்டுமே குதூகலமாக வாழும் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தமிழக மக்கள் எப்போதோ தயாராகி விட்டார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக- பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வகையில் மகத்தான வெற்றி பெற்று, தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கும். மக்கள் பணத்தை சுருட்டி ஒய்யார வாழ்வு வாழும் தி.மு.க.,வினர், படுதோல்வியை தழுவி செய்த தவறுகளுக்காக தண்டனை அனுபவிப்பார்கள்.
இவ்வாறு எல்.முருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.