பெரியார் பல்கலை வி.சி. மீதான வழக்கு விசாரணைக்கு தடை
பெரியார் பல்கலை வி.சி. மீதான வழக்கு விசாரணைக்கு தடை
ADDED : ஜன 19, 2024 11:58 PM

சென்னை:முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன். இவர் விதிகளை மீறி, பல்கலை பெயரில் நிறுவனத்தை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாக, பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும், அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்படி, இந்திய தண்டனை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். பின், அவருக்கு ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
ஜாமினை ரத்து செய்யக்கோரி, காவல்துறை சார்பிலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் சார்பிலும், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
துணைவேந்தர் சார்பில் தாக்கல் செய்த மனு, நேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்க டேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
துணைவேந்தர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், பல்கலை பதிவாளர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, 'இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிட இருப்பதால், விசாரணையை சிறிது நேரம் தள்ளி வைக்க வேண்டும்' என, காவல்துறை சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். பின், அவர் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்ததில், மனுதாரரின் செயல்பாடுகளில் எவ்வித குற்ற நோக்கமும் இருப்பதாக தெரிய வில்லை; உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே, போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என, போலீசார் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்தால், அது தொடர்பாக விசாரிக்கப்படும்,'' என்றார்.
துணைவேந்தரின் இடைக்கால ஜாமினை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''துணைவேந்தர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால தடை விதித்துள்ளார். மாஜிஸ்திரேட் உத்தரவை எதிர்த்த வழக்கை மேற்கொண்டு நடத்த இயலாது,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை வரும் பிப்.,7க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.