100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி: அமைச்சர் பெரியசாமி ஒப்புதல்
100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி: அமைச்சர் பெரியசாமி ஒப்புதல்
UPDATED : ஏப் 02, 2025 06:46 AM
ADDED : ஏப் 02, 2025 02:00 AM

சென்னை: 'அண்ணாமலை கூறியது போல், 100 நாள் வேலை திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்திற்கு கூடுதல் நிதி என்பது உண்மையே. ஆனால், திட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
'தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான, 100 நாள் வேலை திட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு, முதல்வர் பதிலளிப்பாரா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் தொகையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
மாறாக, எவ்வளவு மனித சக்தி நாட்கள் என்று தான், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு, 52 மனித சக்தி நாள் உறுதி செய்யப்படுகிறது. இது, தொழிலாளர் மதிப்பீடு எனப்படுகிறது.
மக்களை பாதிக்கும்
அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய ஊதியம் எவ்வளவு என, மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, முழுமையாக வேலை செய்தால், 319 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியது போல, இதர மாநிலங்களை விட, தமிழகம் இத்திட்டத்தில் கூடுதல் நிதியை பெற்றுள்ளது என்பது உண்மையே.
இத்திட்டத்தில், மக்கள் தொகை, ஊராட்சிகளின் எண்ணிக்கை என்ற எந்த வேறுபாடும் குறிப்பிடாமல், வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய நிதியும், மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 1.09 கோடி மக்கள், இத்திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு, 2025 - 26ம் நிதியாண்டிற்கு, 86,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியை குறைப்பது அல்லது நிறுத்துவது என்பது நேரடியாக பெண்கள் மற்றும் பின்தங்கியுள்ள மக்களை பாதிக்கும்.
இதன் வாயிலாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை நிறுத்த முடியாது என்பதால், மனித சக்தி நாட்களை குறைப்பது என, இத்திட்டத்தை நீர்த்து போக செய்யும் நடவடிக்கையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
சிறப்பான செயல்பாடு
திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம், 100 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்களில், 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. இத்திட்டத்திற்கான நிதி பங்கீடு குறித்து, அண்ணாமலை கூறியது தவறானது.
தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை குறைவாக மதிப்பிடுவதை விட்டுவிட்டு, மற்ற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் சிறந்த நடைமுறைகளை உதாரணமாக கொண்டு செல்ல, மத்திய அரசு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

