கோயில் திருவிழாவில் பாகுபாட்டை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கோயில் திருவிழாவில் பாகுபாட்டை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : மே 16, 2025 06:25 AM

மதுரை : கரூர் மாவட்டத்தில் வெவ்வேறு கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் தடுக்கப்படுவதாகவும், வழிபாட்டு உரிமை கோரியும் தாக்கலான வழக்குகளில், 'கோயில் திருவிழாவில் பாகுபாட்டை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் வடபகுதி ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: நெரூர் வட பகுதி சேனப்பாடியில் அரவாயி அம்மன் கோயில் உள்ளது. இரு சமூகத்தினருக்கு சொந்தமானது. வைகாசி திருவிழா மே 21 முதல் மே 23 வரை நடைபெற உள்ளது.
திருவிழாவின் 2 வது நாளில் கோயிலின் தேர் சேனப்பாடியிலிருந்து புறப்பட்டு நெரூர் மாரியம்மன் கோயிலை அடையும். அப்போது எங்கள் சமூக மக்கள் தேர் முன் பொங்கல் வைத்து பூஜை செய்வர். பின் தேர் மட்டும் சேனப்பாடிக்கு திரும்பும். இந்நடைமுறை பழங்காலத்திலிருந்து தொடர்கிறது. 15 ஆண்டுகளாக தேர் எங்கள் பகுதிக்குள் நுழைவதில்லை.
பாகுபாடின்றி எங்கள் பகுதி வழியாக தேர் ஊர்வலம் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
கரூர் மாவட்டம் மேட்டுப்பட்டி சுப்பிரமணி தாக்கல் செய்த பொதுநல மனு: குளித்தலை அருகே பொருந்தலுாரில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தினரை வழிபட, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும். டீக்கடை, ஓட்டலில் ஜாதி பாகுபாடு நிலவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமார் ஆஜராகினர்.
அரசு தரப்பு: பொருந்தலுார் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டப்படவில்லை. வழிபடுவதிலிருந்து யாரையும் தடுக்கவில்லை. அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதில் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பதை திசை திருப்பும் நோக்கில் ஒருவரை ஏற்பாடு செய்து இங்கு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நெரூர் வடபகுதி சேனப்பாடியில் உள்ளது தனியார் கோயில். அதற்கு நிர்வாகிகள் உள்ளனர்.நீதிபதிகள்: கலெக்டர் நினைத்தால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அனைத்திற்கும் நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றுவதற்குள் சம்பந்தப்பட்ட கலெக்டர் இடமாறுதலில் சென்றுவிடுவார். தேர் ஊர்வலம் கோயிலைச் சுற்றி மட்டும் வந்தால் பிரச்னை இல்லை. ஒரு தெருவிற்கு வந்து மற்றொரு தெருவை தவிர்த்தால் அது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தேர் செல்லவேண்டும். அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தினமும் இதுபோல் பல்வேறு வழக்குகள் தாக்கலாகின்றன. இதற்கு தீர்வு தான் என்ன. இது நவீன காலம். இதற்கேற்ப நடைமுறைகளை மாற்ற வேண்டும். கோயில் திருவிழாவில் பாகுபாட்டை ஒழிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.