ADDED : பிப் 11, 2024 12:09 AM
சென்னை:சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்திடம் உள்ள அரசுக்கு சொந்தமான, 62,237 சதுர அடி நிலத்தை, இரண்டு மாதங்களில் மீட்க நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில், 'டான்சி' என்ற, தமிழ்நாடு சிறு தொழில் கழகத்துக்குச் சொந்தமான, 62,237 சதுர அடி நிலத்தை, 'ஈகிள் பிளாஸ்க்' நிறுவனத்துக்கு, 1981 செப்., 9ல் ஒப்படைத்து, 12,036 ரூபாய் மாத வாடகை செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தை 2006 பிப்., 22ல் ஆய்வு செய்த தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர், 'லைசென்ஸ்' காலாவதியாகி விட்டதாக கூறி, அந்நிறுவன பெயரை தொழிற்சாலைகள் ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இருப்பினும், அந்த நிலத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதையடுத்து, அந்த நிலத்தை காலி செய்ய உத்தரவிட கோரி, சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில், டான்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைசென்ஸ் அவ்வப்போது புதுக்கப்பட்டு, தொழிற்சாலை இயங்கி வருவதாக, ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறு வழக்குகள் நீதிமன்றம், டான்சி தொடர்ந்த வழக்கை, 2007 மார்ச் 2ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, டான்சி மேல்முறையீடு செய்த வழக்கு, 7வது சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமன்லால், வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி, 'அரசுக்கு சொந்தமான நிலத்தை, தற்போது ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் பயன்படுத்தவில்லை.
அங்கு பொருட்கள் எதையும் நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை. மூன்று பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் நடத்திய ஆய்வில், ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தில் மூன்று பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்; தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, டான்சிக்கு சொந்தமான இடத்தை, ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் காலி செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தை, இரண்டு மாதங்களில் அகற்ற, டான்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.