பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணையை தொடர அனுமதி
பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணையை தொடர அனுமதி
ADDED : ஜன 10, 2025 11:48 PM
சென்னை:சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன். இவர், அரசு அனுமதியின்றி விதிகளை மீறி, சொந்தமாக பெரியார் பல்கலை தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவக்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாகவும், பல்கலை அதிகாரிகளை வைத்து, அமைப்பை இயங்க செய்ததாகவும், பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
மேலும், துணை வேந்தருக்கு எதிராக, பல்கலை ஊழியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பிய போது, ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக, துணை வேந்தருக்கு எதிராக புகார் எழுந்தது.
புகார் அடிப்படையில், சேலம் கருப்பூர் போலீசில், ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது, மோசடி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான துணைவேந்தர் ஜெகநாதன், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெகநாதன் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து, கடந்த ஆண்டு ஜன., 19ல் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி, உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'முதல் தகவல் அறிக்கை, பதிவு செய்யப்பட்ட துவக்க நிலையிலேயே, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை' என, போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதி, ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்ககு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.