விசாரணை அதிகாரியிடம் மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி
விசாரணை அதிகாரியிடம் மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி
ADDED : ஆக 08, 2025 01:06 AM
சென்னை:திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில், வாலிபருக்கு எதிரான, 'போக்சோ' வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படவிருந்த நிலையில், விசாரணை அதிகாரியிடம், மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இதற்கு, மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தனர்.
இதுகுறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகாரில், வாலிபர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வாலிபர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான, காவல் ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதித்து உத்தரவிட்டது.