அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 பணியிடம் நிரப்ப அனுமதி
அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 பணியிடம் நிரப்ப அனுமதி
ADDED : அக் 31, 2024 05:48 AM

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், பின்னடைவு காலிப்பணியிடம் உட்பட 2,877 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணை:
அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் காலியிடங்கள் இருப்பதால், விடியல் பயணத் திட்டம் பாதிக்கப்படுவதோடு, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, 25 சதவீத காலி இடங்களையாவது நிரப்பினால் மட்டுமே, இடையூறு இல்லாமல், போக்குவரத்து சேவை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப, தலைமைச் செயலர் அறிவுறுத்தினார்.
அதை ஏற்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் சேர்த்து, 2,340 டி.சி.சி., எனப்படும், ஓட்டுனர், நடத்துனர் பணிகளை ஒருசேர செய்வோரை நியமிக்கலாம்.
இதில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 307 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், 537 தொழில்நுட்ப பணியாளர் காலிப்பணியிட விபரத்தை, டி.என்.பி.எஸ்.சி.,-க்கு வழங்கி, நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க, நிர்வாக இயக்குனர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 462 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.