கார் குண்டு வெடிப்பு வழக்கு மூவரை விசாரிக்க அனுமதி
கார் குண்டு வெடிப்பு வழக்கு மூவரை விசாரிக்க அனுமதி
ADDED : நவ 08, 2024 11:13 PM
சென்னை:கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான மூவரை, ஆறுநாள் காவலில் வைத்து விசாரிக்க, தேசிய புலனாய்வு முகமைக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2022, அக்., 23ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடத்தி, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ,, என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், கோவையைச் சேர்ந்த அபு ஹனிபா, பவாஸ் ரஹ்மான், சரண் ஆகியோரை காவலில் விசாரிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று நீதிபதி இளவழகன் முன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதான மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆறு நாள் காவலில் விசாரிக்க, அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.