நிலங்களை துல்லியமாக அளக்க 'ரோவர்' கருவிகள் வாங்க அனுமதி
நிலங்களை துல்லியமாக அளக்க 'ரோவர்' கருவிகள் வாங்க அனுமதி
ADDED : டிச 11, 2025 03:52 AM

சென்னை: தமிழகத்தில் நிலங்களை துல்லியமாக அளக்கும் பணிகளுக்காக, 27 கோடி ரூபாயில், அதிநவீன 'ரோவர் கருவிகள்' வாங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் நிலங்களை தனித்தனியாகவும், மொத்தமாகவும் அளக்கும் பணிகள், நில அளவைத் துறை வாயிலாக மேற்கொள்ளப் படுகின்றன.
இதில் பாரம்பரிய நடைமுறைகளில், உரிய விபரங்கள் கிடைத்தாலும், இப்பணியை தற்போதைய சூழலுக்கு ஏற்ப, துல்லியமாக்க வேண்டியுள்ளது.
வருவாய் துறை மற்றும் நில அளவைத் துறை பணிகள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப நில அளவைப் பணிகளை, டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, நிலங்களை, அவற்றின் இருப்பிடத்தை, செயற்கைகோள் வாயிலாக எளிதாக அறிய, ஜி.பி.எஸ்., முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களில் இருந்தபடியே, அனைத்து நிலங்களின் எல்லைகளையும் அறிய, 'ரோவர் கருவிகள்' பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த, 2023ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களாக, நில அளவை பணிக்கு, ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன.
அடுத்த கட்டமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வழங்க, 454 ரோவர் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இவற்றை, 27 கோடி ரூபாயில் வாங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இதற்கு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன என, நில அளவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

