கோவில் சொத்தை பதிவு செய்ய அனுமதி சார் -- பதிவாளருக்கு முன்ஜாமின் மறுப்பு
கோவில் சொத்தை பதிவு செய்ய அனுமதி சார் -- பதிவாளருக்கு முன்ஜாமின் மறுப்பு
ADDED : டிச 27, 2024 02:03 AM
சென்னை:நீதிமன்ற தடை குறித்து அறிந்தும், கோவில் சொத்தை உறவினருக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கிய சார் - பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நிர்வாக அறங் காவலர் தர்மலிங்கம் என்பவர், மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஜெயச்சந்திரன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளதாக கூறியிருந்தார்.
புகாரை விசாரித்த போலீசார், சொத்தை பதிவு செய்த சார் - பதிவாளர் செந்தாமரை மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோவில் சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது குறித்தோ, பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ தனக்கு தெரியாது என வாதிடப்பட்டது.
போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ''கோவில் சொத்துக்கள் பதிவுக்கு தடை இருப்பது குறித்து, மனுதாரருக்கு நன்கு தெரியும். அலுவலக உதவியாளர், அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
''இருப்பினும், வேண்டும் என்று தன் உறவினருக்கு, இந்த கோவில் சொத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளார். மனுதாரருக்கு எதிராக, ஏற்கனவே வழக்கு உள்ளது என்பதால், முன்ஜாமின் வழங்கக்கூடாது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'இவ்வழக்கில் மனுதாரர், நீதிமன்ற வழக்கு குறித்து அறிந்திருந்தும், வேண்டுமென்றே பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளார். மேலும், அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன' என கூறி, சார் - பதிவாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.