ADDED : ஜூலை 11, 2026 02:21 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, தமிழக போக்குவரத்து துறையில், ஆம்னி பஸ்களுக்கு மீண்டும், 'பர்மிட்' வழங்குதல், புதுப்பித்தல் பணிகள் தொடங்கி உள்ளன.
முக்கிய கோப்பு
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப் படுகின்றன.
இந்நிலையில், ஆம்னி பஸ்கள் பதிவு, 'பர்மிட்' புதுப்பிப்பு, உரிமையாளர்கள் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள், 40 நாட்களாக முடங்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், 50 புதிய பஸ்கள் உட்பட, 450 ஆம்னி பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நம் நாளிதழில், கடந்த, 7ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ஆம்னி பஸ்களுக்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: ஆம்னி பஸ்களுக்கு புதிய பர்மிட் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான முக்கிய கோப்புகள், 40 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தன.
மகிழ்ச்சி
இது தொடர்பாக, போக்குவரத்து ஆணையரகத்தில் மனு அளித்தோம். ஆனாலும், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், தற்போது தீர்வு கிடைத்து உள்ளது. ஆம்னி பஸ்களுக்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
