சிறுமி பலாத்கார வழக்கு தஷ்வந்த் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி
சிறுமி பலாத்கார வழக்கு தஷ்வந்த் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி
ADDED : நவ 28, 2025 07:04 AM

- டில்லி சிறப்பு நிருபர் - சென்னையில், 6 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை போரூரில் வசித்து வந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017ல் படுகொலை செய்யப்பட்டார்.
பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர், சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில், தஷ்வந்த் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், செலவுக்கு பணம் தர மறுத்த தன் தாயை, தஷ்வந்த் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மீண்டும் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்த் மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க போலீஸ் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, மரண தண்டனையை ரத்து செய்ததுடன், வழக்கிலிருந்தும் அவரை விடுவித்து, கடந்த அக்., 8ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

