ADDED : டிச 25, 2024 12:59 AM
சென்னை:உயர்த்தப்பட்ட பணிக்கொடையை, 2006ல் இருந்து வழங்கும்படி, டான்சி நிறுவன ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு சிறுதொழில் கழகமான டான்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற, 30க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்த மனு:
ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, உயர்த்தப்பட்ட பணிக்கொடையை, 2006ல் இருந்து எங்களுக்கு வழங்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவருக்கும், 2006 முதல் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுகின்றன. டான்சி ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2010 ஜூலையில் சிறுதொழில் கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 2006 முதல் சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தவும், 2007 முதல் பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சி.குமரப்பன் முன், விசாரணைக்கு வந்தது. நிதித் துறை சார்பில் கூடுதல் பிளீடர் எஸ்.ஜான் ராஜாசிங், சிறுதொழில் கழகம் சார்பில், வழக்கறிஞர் வி.கே.முகுந்த் ஆஜராகினர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணிக்கொடை சட்டத்தை பார்க்கும்போது, அதன் கீழ் வரும் ஊழியர்களையும், மற்ற ஊழியர்களையும் வேறுபடுத்துகிறது.
சிறுதொழில் கழக ஊழியர்களை பொறுத்தவரை, பணிக்கொடை சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
அதன்படி, உயர்த்தப்பட்ட தொகையை, 2010 அக்டோபரில் இருந்து மட்டுமே அமல்படுத்த முடியும். எனவே, 2010 ஜூலையில் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

