ADDED : பிப் 16, 2024 02:44 AM
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்தாண்டு ஜூனில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்தாண்டு ஜன. 22ல் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜரானார். மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவு:
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு விசாரணையை நடத்த எந்த தடையும் இல்லை. இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோர எந்த தகுதியும் இல்லை.
விசாரணையை தாமதப்படுத்தும் விதமாக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கோரியபடி விசாரணையை தள்ளிவைக்க எந்த தகுதியும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. விசாரணையை தாமதப்படுத்தும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யக்கூடியது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய செந்தில் பாலாஜி இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய மனுவை நிராகரித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி செந்தில் பாலாஜி தரப்பில் 'மெமோ' தாக்கல் செய்யப்பட்டது. மெமோ குறித்து பின்னர் முடிவு செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.