ADDED : நவ 26, 2024 04:02 AM

தஞ்சாவூர்: தமிழ் தந்தை என போற்றப்பட்டவர் மறைமலை அடிகளார். இவரது மகன் பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா, 43, பி.காம்., பட்டதாரி. இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசிக்கிறார். லலிதாவின் கணவர் செந்தில்குமார், 52, மாவு மில் ஒன்றில் வேலை பார்க்கிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் லலிதா, நேற்று கலெக்டர் அலுவலகத்தில், 'குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்' என மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், வீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
பின், லலிதா கூறியதாவது:
என் கணவர், மாவு மில்லில் வேலை செய்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வாடகை கொடுப்பதற்கு வருமானம் இல்லாத காரணத்தால் குடிசை மாற்று வாரியத்தில் வீடு தர வேண்டும் என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன்.
மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்து, ஓராண்டாக காத்து இருக்கிறேன். எனவே, கலெக்டர் என் மனுவை ஆய்வு செய்து, வீடு மற்றும் மகளிர் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.