ADDED : பிப் 06, 2024 02:13 AM
சென்னை: 'தமிழகம் முழுதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும்' என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., ஆட்சி குளறுபடியால் தமிழகம் முழுதும் உள்ள, ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலக்காரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தை சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு உரிமைகள் பெற 'சீர்மரபு பழங்குடியினர்' எனவும், மாநில அரசு உரிமைகளை பெற 'சீர்மரபு வகுப்பினர்' எனவும் இரட்டை ஜாதி சான்றிதழ்கள் வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையை மாற்றி, அந்த சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று 'சீர்மரபு பழங்குடியினர்' என ஒற்றை சான்றிதழ் வழங்க, அரசாணை வெளியிட வேண்டும். இதுகுறித்து முதல்வர், தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.