ஈரோடில் வரும் 5ல் மனு கொடுக்கும் போராட்டம்: கள் இயக்கம் அறிவிப்பு
ஈரோடில் வரும் 5ல் மனு கொடுக்கும் போராட்டம்: கள் இயக்கம் அறிவிப்பு
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:15 PM
கரூர்: ‘‘ கீழ் பவானி பாசனத்தில், முறையான நீர் நிர்வாகம் செய்ய வலியுறுத்தி வரும், 5ல் ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்,’’ என, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கீழ்பவானி பாசனம் மூலம், பவானிசாகர் முதல் அரவக்குறிச்சி வரை, விவசாய பணி நடக்கிறது. ஆனால், கீழ்பவானி பாசனத்தில் முறையாக நீர் நிர்வாகம் நடப்பது இல்லை. இந்த குற்றச்சாட்டு தவறு என நிரூபித்தால், பொதுப்பணி துறைக்கு பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வர்கள் பன்னீர் செல்வம், இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ராமலிங்கம் ஆகியோருக்கு தலா, 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.
கீழ்பவானி பாசனத்தில் முறையான நீர் நிர்வாகம் செய்ய வலியுறுத்தி வரும், 5ல், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். காவிரி தீர்ப்பில், நாள்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சம் இடம் பெறாதவரை, பிரச்னை தீர வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் மூலம் பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச பஸ் பயணம், தங்க மோதிரம் திட்டங்களை தமிழக மக்கள் கேட்கவில்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை விட்டு விட்டு, நீர் பாசன திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
