ADDED : ஜூலை 24, 2025 12:28 AM
சென்னை:'தமிழகத்தில், விடுதலை புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரன் பெயரையோ, படத் தையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1991ம் ஆண்டு மே 21ல், காஞ்சி புரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவரும், கூடுதல் எஸ்.பி.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான அனுசுயா டெய்சி எர்னெஸ்ட் உள்ளிட்டோரும் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், அவரும், பாரத் இந்து முன்னணி நிறுவன தலைவர் பிரபு மற்றும் ஆதி சிவசோழர் புலிப் படையின் தலைவர் ஸ்ரீலா சிவபாலன் ஆகியோரும், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனு:
நாட்டில் விடுதலை புலிகள் அமைப்பிற்கு தடை உள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தையும், பெயரையும், தமிழகத்தில் அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் நுால்கள் வெளியிடுவோர் பயன்படுத்தி வருவது மிகவும் ஆபத்தானது.
இதனால், பிரபாகரன் படம், பெயர், விடுதலை புலிகள் அமைப்பின் கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், பிரபாகரன் தொடர்பான போஸ்டர், பேனர் வைக்கவும், நுால்கள் வெளியிடவும் தடை செய்ய வேண்டும். தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

