செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளிவைக்க கோரி மனு
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளிவைக்க கோரி மனு
ADDED : ஜூலை 22, 2025 11:56 PM
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம், எம்.கார்த்திகேயன் உட்பட 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். அதைத்தொடர்ந்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.கார்த்திகேயன் தரப்பில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசார ணையை தள்ளி வைக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவுக்கு, அமலாக்கத்துறை பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி எஸ்.கார்த்திகேயன், விசாரணையை, 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

