மீண்டும் 'நீட்' தேர்வு கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
மீண்டும் 'நீட்' தேர்வு கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ADDED : ஜூன் 07, 2025 12:56 AM
சென்னை:மின் தடையால் முழுமையாக எழுத முடியாததால், 'நீட்' மறுதேர்வு நடத்த கோரி, மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. தேர்வு நாளன்று சென்னையில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெளியிடக்கூடாது
சென்னை ஆவடி, மீனம்பாக்கத்தில் உள்ள மையங்களில் ஏற்பட்ட மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறுதேர்வு நடத்த கோரியும், 16 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது' என, இடைக்கால தடை விதித்தது.
தாக்கம் ஏற்படும்
கடந்த வாரம், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மின் தடையால் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, மறுதேர்வு நடத்த முடியாது' என, தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சி.குமரப்பன், நேற்று பிறப்பித்த உத்தரவில், 'தேசிய தேர்வு முகமை நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது. அந்த முடிவில் இருந்து விலக, இந்த நீதிமன்றம் எந்த காரணத்தையும் கண்டறியவில்லை.
'தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்' என கூறி, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.