ADDED : ஆக 08, 2025 12:58 AM
சென்னை:உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடலுாரைச் சேர்ந்த மருத்துவ மாணவரை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற, கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த கிஷோர் என்ற மாணவரை, ரஷ்ய அதிகாரிகள், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகின.
மாணவர் கிஷோரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எதன் அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள்? மூன்றாம் நபர் தாக்கல் செய்வதற்கு, இது பொது நல வழக்கு அல்ல.
' மாணவரின் தந்தை அல்லது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.