புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ' அனுமதி கோரி டி.ஜி.பி.,யிடம் மனு
புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ' அனுமதி கோரி டி.ஜி.பி.,யிடம் மனு
ADDED : நவ 27, 2025 01:33 AM

புதுச்சேரி: த.வெ.க., தலைவர் விஜய், வரும் டிச.,5ம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த உள்ளார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பி.,யிடம் த.வெ.க.,வினர் மனு கொடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திய விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், இடைவெளி விட்டுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் முதன் முறையாக, வரும் டிச., 5ல் 'ரோடு ஷோ' வாயிலாக மக்களை சந்திக்கிறார்.
அதற்காக அனுமதி கோரி, த.வெ.க., ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் நிரஷ்குமார் நேற்று டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
மனுவில், 'விஜய், வரும் டிச.,5ல் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காலை 9:00 மணிக்கு புதுச்சேரி வருகிறார்.
'காலாப்பட்டில் துவங்கி அஜந்தா சிக்னல், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், கன்னியாக்கோவில் வழியாக மாலை 5:00 மணி வரை 'ரோடு ஷோ' செல்கிறார்.
'உப்பளம் வாட்டர் டேங்க் சந்திப்பில் 10,௦௦௦ பேர் பங்கேற்கும் கூட்டத்தில், வாகனத்தில் இருந்தபடி பேசுகிறார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு, அனுமதி தரக்கூடாது என புதுச்சேரியை சேர்ந்த அசோக்ராஜா என்பவர் டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த த.வெ.க.,வினர், நேற்று மாலை, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விஜயின் 'ரோடு ஷோ'விற்கு அனுமதி அளிக்கக் கோரி மனு கொடுத்தனர்.
புதுச்சேரியில், ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன், த.வெ.க., கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், த.வெ.க., பொதுச்செயலரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆனந்தை, முதல்வர் வேட்பாளராக களமிறக்க, விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதுச்சேரியில் மறுநாளும் முகாமிடும் விஜய், டிச., 6ல், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

