திருச்சி - விருதுநகர் ரயிலை துாத்துக்குடி வரை நீட்டிக்க மனு
திருச்சி - விருதுநகர் ரயிலை துாத்துக்குடி வரை நீட்டிக்க மனு
ADDED : ஏப் 23, 2025 02:40 AM
சென்னை:'திருச்சி - காரைக்குடி - விருதுநகர் ரயிலை, துாத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்' என, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் தென்மண்டல செயலர் சுந்தர் கூறியதாவது: துாத்துக்குடி முக்கிய தொழில் மற்றும் துறைமுகம் நகராக இருக்கிறது. எனினும், திருச்சி போன்ற முக்கிய நகரங்களை இணைக்க, போதிய அளவில் ரயில் வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மருத்துவம், வேலை, கல்வி மற்றும் வணிக தேவைகளுக்காக, துாத்துக்குடியில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் சாலை போக்குவரத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
திருச்சி - காரைக்குடி பயணியர் ரயில், காரைக்குடி - விருதுநகருக்கு ஒன்றிணைப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை துாத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த ரயில் நீட்டிக்கப்பட்டால், துாத்துக்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சிக்கு நேரடி ரயில் வசதியை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

