மகா சிவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க மனு
மகா சிவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க மனு
ADDED : பிப் 13, 2025 12:47 AM
சென்னை:'மகா சிவராத்திரியையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்' என, அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில், தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அதன் தென் மண்டல செயலர் சுந்தர் கூறியதாவது:
பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது.
அதேபோல், வரும் 26ம் தேதி, மகா சிவராத்திரி அன்று, தமிழகத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும், இரவு முழுதும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கும். பக்தர்கள் இரவு முழுதும் கோவிலில் இருந்து, சிவனை வழிபடுவர்.
வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில், ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டன.
எனவே, பக்தர்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை இயக்க கோரி, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுப்பதாக, ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

