ரயிலில் 'டைனமிக்' கட்டண முறை நீக்க கோரி அமைச்சரிடம் மனு
ரயிலில் 'டைனமிக்' கட்டண முறை நீக்க கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஜூலை 02, 2025 10:36 PM
சென்னை:ஏ.பி.ஜி.பி எனப்படும், அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் இணை செயலர் விவேகானந்தன், தென்மண்டல அமைப்பு செயலர் சுந்தர் ஆகியோர், டில்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் பிரீமியம் ரயில்களில், படிப்படியாக அதிகரிக்கும், 'டைனமிக்' கட்டண முறையை நீக்க வேண்டும்.
அனைத்து ரயில் பெட்டிகளிலும், ஒரு மேற்கத்திய கழிப்பறை, மூன்று இந்திய கழிப்பறை என்ற முறையை மாற்றி, இரண்டு மேற்கத்திய கழிப்பறை மற்றும் இரண்டு இந்திய கழிப்பறை உடைய, வடிவமைப்பை உருவாக்க வேண்டும்.
அதிகமான மெமூ ரயில்களை இயக்கும் வகையில், மதுரையில் 'மெமூ ஷெட்' அமைக்க வேண்டும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை, புதிய முனையமாக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட, ரயில்வே அமைச்சர், கோரிக்கைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளார்.