ADDED : மார் 02, 2024 12:39 AM
சென்னை:கட்டுமான பொருட்கள் விலை குறைப்பு தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை, ஒப்பந்ததாரர்கள் சந்தித்து பேசினர்.
மணல், எம்.சாண்ட், சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் கட்டடங்களின் கட்டுமான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
திட்ட மதிப்பீடு அடிப்படையில் பணிபுரியும் அரசு கட்டுமான ஒப்பந்ததாரர்கள், நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால், குறித்த காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை, நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் திரிசங்கு உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னையில் நேற்று சந்தித்தனர்.
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் வேலு உறுதியளித்தார்.

