ADDED : ஆக 29, 2025 05:49 PM

சென்னை: பிரச்னை என்னனு கேட்டு வாங்கி, அது சாக்கடைக்குள் கிடக்கிறது. இதற்கு பெயர்தான் நல்லாட்சி, திராவிட மாடல் ஆட்சி என 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் ஆற்றில் கிடந்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களை சந்தித்தார். அதன் விபரம் பின்வருமாறு:
நிருபர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சாக்கடையில் கிடக்கிறது?
சீமான் பதில்: ஆமா, சாக்கடை குழிக்குள் கிடந்துருக்கிறது. அதை எடுத்து பார்க்கிறார்கள். அவ்வளவுதான். மக்களுக்கான மதிப்பு. முன்பு பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டது என்று சொல்கிறார்கள். தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் எந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்ப்போம்.
அப்பொழுது பிரச்னைகள் அப்படியே இருக்கிறது. அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நான்கரை ஆண்டுகள் ஆட்சி நிறைவு பெற்றது. அப்பொழுது இன்னும் பிரச்னைகள் இருக்கிறது. அந்தப் பிரச்னைகள் என்னன்னு கேட்டு வாங்கி, சாக்கடை தண்ணீருக்குள் கிடக்கிறது. இதுக்கு பெயர்தான் நல்லாட்சி, திராவிட மாடல் ஆட்சி.
நிருபர்: அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் தவறு என்ன என்று எல்.முருகன் கூறி உள்ளாரே?
சீமான் பதில்: அது குறித்து நான் எப்படி சொல்ல முடியும். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான் பதில் சொல்ல வேண்டும். நான் எப்படி பதில் சொல்றது. ஆர்எஸ்எஸ்- பாஜவின் தலைமையில் இருந்து இயக்குகிறது. உங்களுக்கு தெரியும். பாஜ - அதிமுகவின் கூட்டணியில் இருந்து இயக்குகிறது.
அதனால் தான் இயக்கினால் என்ன என்று சொல்கிறார். அது இயக்கினால் நாடு எதை நோக்கி போகும், எங்கு செல்லும் என்று நமக்குத் தெரிவதனால், அதற்கு நாம் முடிவு எடுத்து இந்த தேர்தலில் வேலை செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

