பள்ளி மாணவ - மாணவியருக்கு உடற்கல்வி பாடத்திட்டம் வெளியீடு
பள்ளி மாணவ - மாணவியருக்கு உடற்கல்வி பாடத்திட்டம் வெளியீடு
ADDED : ஆக 05, 2025 04:39 AM
சேலம்: தமிழக பள்ளிகளில் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தி, மாநில, தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, உடற்கல்விக்கு பாட வேளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கென பிரத்யேக பாடத்திட்டம் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனால் உடற்கல்வி ஆசிரியர்கள், தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளையும், அதன் நுணுக்கங்களையும் கற்பித்து வந்தனர். கடந்த 2017ல், தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட போதும், உடற்கல்விக்கென பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தற்போது, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உடற்கல்வியை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பது குறித்த பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, 184 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில், உடலை பற்றிய கல்வியறிவு, விளையாட்டு கல்வி, பாதுகாப்பு கல்வி ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
விளையாட்டின்போது என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.