ADDED : பிப் 06, 2025 01:35 AM
சென்னை:சென்னை பல்கலை, இயற்பியல் ஆய்வுக் கட்டுரைகளை தமிழில் வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலையின், கோட்பாட்டு இயற்பியல் துறை சார்பில், 'பயனுறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அண்மை போக்கு' என்ற தலைப்பில் சமீபத்தில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ஆய்வாளர்கள் வழங்கிய, ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும், கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவர் ரீட்டாஜான், தமிழில் மொழி பெயர்த்தார். இதை, இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இதுகுறித்து, ரீட்டாஜான் கூறியதாவது:
தமிழ் தொன்மையான மொழி என பெருமை பேசுவதால் பயன் இல்லை. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப, புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்.
அந்த வகையில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட கட்டுரைகளில் உள்ள, துறை சார்ந்த பன்மொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை, வல்லுநர்களுடன் இணைந்து உருவாக்கினோம்.
அவற்றை பயன்படுத்தி, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். இதை, உயர்கல்வி நிறுவன நுாலகங்களுக்கு அனுப்ப உள்ளோம். பல காலமாக இயற்பியல் துறைக்கான கலைச்சொற்கள் இல்லை என்ற குறை, இதனால் நீங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.