ADDED : பிப் 12, 2024 07:01 AM

''தி.மு.க., விதித்த தடைகளை எல்லாம் உடைத்து, யாத்திரையை நடத்தி இருக்கிறோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரும் நட்டாவை வரவேற்றனர்.
தமிழக பா.ஜ., சார்பில், சென்னை தங்கசாலை பகுதியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், நட்டா, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
முருகன்: வெற்றிவேல் யாத்திரை நடத்தி, சட்டசபைக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பினோம். அண்ணாமலை யாத்திரை வாயிலாக, தமிழகம், புதுச்சேரியில், 40 எம்.பி.,க்களை பார்லிமென்டிற்கு அனுப்புவோம்.
அண்ணாமலை: ராமேஸ்வரத்தில், 2023 ஜூலை 28ல், 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை துவக்கப்பட்டது; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்து சென்றுள்ளது.
தி.மு.க., போட்ட தடைகளை எல்லாம் உடைத்து, யாத்திரையை நடத்தி இருக்கிறோம். மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடியின் கரத்தை வலுப்படுத்த, வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து பெருமளவு எம்.பி.,க்களை அனுப்பி வைக்கும் வரை, நமக்கு ஓய்வு கிடையாது.
சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தனர். சென்னையில் உள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள் மக்களுக்கு உதவவில்லை.
சென்னையின் மூன்று எம்.பி.,க்களாக பா.ஜ.,வினர் வெற்றி பெற வேண்டும். அவர்கள் பிரதமர் மோடியின் கனவுப்படி, சென்னையின் கட்டமைப்பை உருவாக்குவர்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.

