கட்டட அனுமதிக்கு ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டம்
கட்டட அனுமதிக்கு ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டம்
ADDED : அக் 29, 2024 09:36 PM
சென்னை:சுய சான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை, பொதுப்பணி துறையின் விலை பட்டியல் அடிப்படையில், ஆண்டுதோறும் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,500 சதுரடி நிலத்தில், 3,500 சதுரடி அளவுக்கான குடியிருப்புகள் கட்ட, சுய சான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான புதிய திட்டம், கடந்த ஜூலையில் துவக்கப்பட்டது. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில், 15,000க்கும் மேற்பட்டோர் உடனடி கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஈடுபட்டுள்ளது. நிர்வாக ரீதியாக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, அதுகுறித்த நடைமுறை விதிகள், கட்டணங்கள் அடங்கிய தீர்மானம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அக்., 10ல் அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள, 12,525 ஊராட்சிகள், நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அமைவிடம் அடிப்படையில், இந்த வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதில், சுய சான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணம், ஒரு சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணம், பொதுப்பணி துறையின் தர விலை பட்டியல் அடிப்படையில், ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். இந்த விபரங்கள் அடங்கிய தீர்மானத்தை, நவ., 5க்குள் கூட்டம் நடத்தி நிறைவேற்ற வேண்டும். தீர்மான விபரங்களை, ஊரக வளர்ச்சி துறைக்கு நவ., 6ல் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுப்பணி துறையில் தர விலை பட்டியல் ஆண்டுதோறும் உயரும் என்பதால், அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் கட்டட அனுமதி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் என்று தெரியவந்துள்ளது.