ADDED : செப் 06, 2025 08:43 PM
சிவகங்கை:காலநிலை மாற்றத்திற்கு தகுந்தாற்போல், மாணவர்களுக்கு பொது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுதும் பள்ளிகளில் ஒரே நாளில் மரக்கன்று நடுதல் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, வீடு அல்லது உள்ளூரில் ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நட வேண்டும். மரக்கன்றுடன் தாய் அல்லது பாதுகாவலருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்.
அந்த புகைப்படத்தை, https://ecoclubs.education.gov.in/ இணையதளத்தில் செப்., 10க்குள் பதிவேற்ற வேண்டும். இந்நிகழ்வு ஒரே நாளில், ஒவ்வொரு வட்டத்திலும், அவர்களுக்கு ஏற்ற நாளில், செப்., 10க்குள் செயல் படுத்தப்பட வேண்டும்.
செங்கல்பட்டு, கோயம் புத்துார், கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, சிவகங்கை, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை, துாத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, தலா, ஒரு லட்சத்து 50,000; அரியலுார், சென்னை தலா, 75,000; என, 38 மாவட்டத்திற்கு, 41 லட்சத்து 25,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.