ஓட்டு வங்கிக்காகவே திட்டங்கள்: அரசு மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ஓட்டு வங்கிக்காகவே திட்டங்கள்: அரசு மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : மார் 18, 2025 05:03 AM

சென்னை : ஓட்டு வங்கிக்காகவே, தி.மு.க., அரசு திட்டங்களை செயல்படுத்துவதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் கொடுத்தார். ஜெயலலிதா ஆட்சியில் உடுக்க உடை, நோட்டு, புத்தகம், பேனா, புத்தக பை, சைக்கிள், லேப்-டாப் என, அனைத்தும் கொடுத்தார். இந்த சமூகநல திட்டங்களால் பயன் அடைந்தது குழந்தைகள் தான்.
ஆனால், மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கும், இப்போது லேப்-டாப் வழங்கப்படும் கல்லுாரி மாணவர்களுக்கும் ஓட்டளிக்கும் வயது. அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், சமூக மாற்றத்திற்காக கொண்டு வரப்பட்டவை. தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், ஓட்டு வங்கிக்காக கொண்டு வரப்பட்டவை.
முதல்வர் ஸ்டாலின்: வெளிநாடுகளும் பாராட்டும், வெற்றிகரமான காலை உணவு திட்டம், ஓட்டு வங்கிக்காக கொண்டு வரப்பட்ட திட்டமா?
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: தனியார் பங்களிப்புடன் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது.
அவர்களுக்கு இங்கு ஓட்டுரிமை உள்ளதா? ஓட்டு போடும் வயது வந்தவர்கள் தான், பஸ்சில் இலவசமாக பயணிக்க முடியும் என்றா சொல்கிறோம்? ஓட்டு வங்கி அரசியலை முதல்வர் ஸ்டாலின் என்றும் செய்ததில்லை. மக்கள்நலத் திட்டங்களை பாராட்டுங்கள்; பாராட்ட மனமில்லை என்றால், பேசாமல் அமருங்கள்.
பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்-டாப்' வழங்கும் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள்?
அமைச்சர் தங்கம் தென்னரசு: பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தவில்லை.
முதல்வர் ஸ்டாலின்: நான் முதல்வரானதும், 'தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், ஓட்டளிக்காதவர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க தவறி விட்டோமோ என வருத்தப்படும் அளவுக்கு செயல்படுவோம்' என்று, கூறினேன். அதன்படியே செயல்பட்டு வருகிறோம். எனவே, இந்த விவாதம் தேவையற்றது.
பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், 52 லட்சத்து, 35,000 லேப்-டாப்கள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில், 'டெண்டர்' விட முடியாததால் வழங்க முடியவில்லை. நீங்கள் ஏன் நிறுத்தினீர்கள்?
முதல்வர் ஸ்டாலின்: நாங்கள் நிறுத்தவில்லை. தேவையான அளவுக்கு கொடுக்க முடியாததால், அ.தி.மு.க., ஆட்சியிலேயே நிறுத்தி விட்டீர்கள். இப்போது, கல்லுாரி மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.