மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க விழுப்புரம் - தாழநல்லுார் இடையே தடுப்புச்சுவர் 84 கி.மீ., துாரத்திற்கு கட்ட திட்டம்
மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க விழுப்புரம் - தாழநல்லுார் இடையே தடுப்புச்சுவர் 84 கி.மீ., துாரத்திற்கு கட்ட திட்டம்
ADDED : அக் 04, 2025 01:22 AM
சென்னை:விழுப்புரம் - திருச்சி தடத்தில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, விழுப்புரம் - தாழநல்லுார் இடையே, 84 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை யின் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்ட, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்கள் செல்லும் வேகத்தின் அடிப்படையில், குரூப் - ஏ வழித்தடம், குரூப் - பி வழித்தடம் என, ரயில் பாதைகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் - ஏ தடத்தில் அதிகபட்சமாக, 160 கி.மீ., வரையும், குரூப் - பி வழித்தடத்தில், 130 கி.மீ., வேகத்திலும் ரயில்கள் இயக்கப்படும்.
நடவடிக்கை அந்த வகையில், சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் -- ஜோலார்பேட்டை வழித்தடங்களில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, சென்னை - திருச்சி, மதுரை - கன்னியாகுமரி தடத்தில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் உள்ள, 2,485 கி.மீ., துார பாதையில், முக்கியமான வழித்தடங் களில் ரயில்கள் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடங்களில் மணிக்கு, 145 கி.மீ., வரை வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது, அரக்கோணம், ஜோலார்பேட்டை, கூடூர் தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, எழும்பூர் - விழுப்புரம் - விருத்தாசலம் - திருச்சி வழித்தடத்தில் தற்போது, மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
நவீன சிக்னல் ரயில் பாதை புதுப்பிப்பு, நவீன சிக்னல் அமைப்பது, தேவையற்ற தடுப்புகளை நீக்குவது, ரயில் பாதையின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் - தாழநல்லுார் இடையே, 84 கி.மீ., துாரத்துக்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது.
ரயில் பாதையின் நடுவில் இருந்து, 3.5 மீட்டர் துாரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். இது, 6 முதல் அதிகபட்சமாக 10 மீட்டர் உயரத்தில் இருக்கும். இதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.