சூரியசக்தி மின் நிலையம் பஸ் டிப்போக்களில் அமைக்க திட்டம்
சூரியசக்தி மின் நிலையம் பஸ் டிப்போக்களில் அமைக்க திட்டம்
ADDED : ஆக 02, 2025 10:54 PM
சென்னை:அரசு போக்குவரத்து கழக பணிமனைகளான டிப்போக்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இப்பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் எட்டு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 313 பணிமனைகள் உள்ளன. இவற்றில், பஸ்கள் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிமனைகளின் மேற்கூரைகள் காலியாகவே உள்ளன.
எனவே, இந்த இடங்களில், சோலார் கருவிகளை நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்ய, தனியார் நிறுவனங்களுக்கு, தமிழக போக்குவரத்து துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல், இதர வழிகளில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்கள், ஏராளமானவை காலியாக உள்ளன. இவற்றில், தனியார் பங்களிப்போடு, வணிக வளாகங்கள் அமைக்க, முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.
இதேபோல, போக்குவரத்து கழகங்களின் பணிமனைகளில், மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, பணிமனைகள் தோறும், சாத்திய கூறு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக, 100க்கும் மேற்பட்ட பணிமனைகளில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, தமிழக போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்கள் சார்பில் இடம் வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள், அந்த நிலத்தை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வாங்கி, சூரிய சக்தி மின் தகடுகளை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இந்த புதிய திட்டம் வாயிலாக, அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு, கணிசமாக வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.