தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு தேவை; அன்புமணி வலியுறுத்தல்
தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு தேவை; அன்புமணி வலியுறுத்தல்
UPDATED : அக் 10, 2026 05:57 PM
ADDED : அக் 10, 2026 05:54 PM

கோவை: ‘‘தோட்ட தொழிலாளர் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும்,’’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கத்தின் 73வது ஆண்டு விழா, அவிநாசி ரோடு, ஜென்னிஸ் ரெசிடென்ஸியில் நடந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
சங்க தலைவர் வினோதன் கந்தையா பேசுகையில், ‘‘தோட்டத்தொழிலை மாநில அரசின் தொழில் துறையின் கீழ் சேர்க்க வேண்டும். இதனால் இத்தொழிலுக்கான அரசு கொள்கை முடிவுகளை, சீராக வடிவமைக்க பெரிதும் உதவியாக இருக்கும். தோட்டத்தொழிலில் குறிப்பிட்ட விளைபொருட்கள் மட்டுமே பயிரிடப்பட வேண்டும் என்ற தற்போதைய சட்டநிலை மாற்றப்பட வேண்டும்,’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக பா.ம.க., தலைவர் அன்புமணி பேசுகையில், ‘‘தமிழகத்தில் தோட்டத்தொழிலை நம்பி நேரடியாக 1.5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் உள்ளனர். தோட்டத்தொழில் வளர்ந்தால் தமிழகம் வளரும். இத்துறையில் தொழிலாளர்களின் பங்களிப்பு 65–70 சதவீதம் வரை உள்ளது. ஆனால், இத்தொழிலில் இருந்து விலகி, பிற துறைகளில் வேலை தேடி இளைஞர்கள் செல்கின்றனர். தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய வடமாநில தொழிலாளர்களை சார்ந்திருக்கும் நிலை உள்ளது. தொழிலாளர் பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது,’’ என்றார்.
சங்க செயலாளர் பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
