ADDED : செப் 24, 2025 09:52 PM
சென்னை:பசுமை இயக்க தினமான நேற்று, 1.5 லட்சம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, 2022ல் பசுமை தமிழகம் இயக்கம் துவங்கப்பட்டது. இதை கருத்தில் வைத்து ஆண்டுதோறும், செப்., 24ம் தேதி பசுமை இயக்க தினமான கடைப் பிடிக்கப்படுகிறது.
இது குறித்து, வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இதில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, பசுமை இயக்க தினம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில், பசுமை இயக்க தின நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. அதில், 1.5 லட்சம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
இத்துடன், 50 பழம் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. 'சங்க இலக்கிய மரங்களின் சிற்றேடு, நகர்ப்புற வனவியல் கையேடு' ஆகியவை வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, வனத் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.