பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் இயக்கம்: துவக்கி வைத்தார் தலைமை செயலர்
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் இயக்கம்: துவக்கி வைத்தார் தலைமை செயலர்
ADDED : ஆக 31, 2025 03:48 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் நீர் நிலைகளில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இயக்கத்தை, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில், தலைமை செயலர் முருகானந்தம் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், 14 இடங்களில் அறிவிக்கப்பட் ட பறவைகள் சரணா லயங்கள் உள்ளன. இவை இடம் பெயரும் பறவை இனங்களுக்கும், அந்தந்த பகுதிகளில் வாழும் பறவை இனங்களுக்கும், முக்கிய வாழிடமாக உள்ளன.
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துக்கு அப்பாற்பட்டு, சரணாலயங்கள் ஈர நிலைகளை பாதுகாக்கின்றன. மீன் வளத்தையும் பெருக்குகின்றன. கார்பன் கூறுகளை சேமிக்கின்றன; உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகின்றன.
முன்னிலை இத்தகைய நுட்பமான சூழலை காப்பதற்கான, முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் நேற்று, தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், பாதுகாப்பு காப்பகங்கள் மற்றும் முக்கிய நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இயக்கம் துவக்கப்பட்டது.
இந்த பணியை, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், முரு கானந்தம் பேசியதாவது:
தமிழகம் எப்போதும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில், முன்னிலையில் இருந்துள்ளது. மாநிலம் முழுதும் பறவை சரணாலயங்கள், நீர் நிலைகளில் நடந்த துாய்மை இயக்கம், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக தொடர வேண்டும்.
வாழிடம் இதன் வாயிலாக, நமது ஈர நிலைகளை மீட்டெடுத்து, விலங்குகளுக்கு பாதுகாப்பான வாழிடத்தை உருவாக்க வேண்டும். மக்கள், அரசு ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது உயிரினப்பன்மையை காக்கும் உறுதியை வலுப்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுப்ரியா சாஹு பேசும்போது, ''தமிழகம், மத்திய ஆசிய பறவை பாதையில் உள்ள முக்கியமான மாநிலம்.
''பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் துாய்மை இயக்கம், பிளாஸ்டிக் மாசுக்கு எதிராக அனைவரையும் சாம்பியன்களாக மாற்றும். பறவைகள், உயிரினப் பன்மைகளை பாதுகாக்க, பிளாஸ்டிக் இல்லாத வாழிடத்தை வழங்க வேண்டும்,'' என்றார்.