பிளஸ் 1 மாணவி அடித்துக் கொலை: ஏரியில் உடல் மிதந்ததால் பரபரப்பு
பிளஸ் 1 மாணவி அடித்துக் கொலை: ஏரியில் உடல் மிதந்ததால் பரபரப்பு
UPDATED : மார் 17, 2024 07:23 AM
ADDED : மார் 17, 2024 07:21 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ் மகள் ஸ்பூர்த்தி, 16; பாகலுார் அரசு பெண்கள் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த, 14ல் அதிகாலை, 2:00 மணிக்குவீட்டிலிருந்து மாயமானார். நேற்று முன்தினம் இரவு தலையில் காயங்களுடன், பட்டவாரப்பள்ளி ஏரியில் சடலமாக மிதந்தார். பாகலுார் போலீசார் சடலத்தை மீட்டுவிசாரித்தனர்-.
இதில், முத்தாலியை சேர்ந்த சிவா, 25, என்ற வாலிபரும், ஸ்பூர்த்தியும் காதலித்துள்ளனர். மாணவிக்கு, 18 வயது பூர்த்தியாகாத நிலையில் 2022 அக்டோபரில் மாணவியை ஆசைவார்த்தை கூறி, வீட்டிலிருந்து சிவா அழைத்து சென்றார்.
மாணவியின் பெற்றோர் புகார்படி, சிவாவை போக்சோ சட்டத்தில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அதன் பின்பும், ஸ்பூர்த்தி, சிவா காதல் தொடர்ந்ததால், பெற்றோர் கண்டித்துஉள்ளனர்.
மாணவியின் வீட்டின் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் பார்த்தபோது, மாணவி மாயமான சமயத்தில், மர்ம நபர் ஒருவர், 'சிசிடிவி' கேமராவை துணி போட்டு மூடிஉள்ளார்.
மேலும், மாணவியை யாரோ அடித்துக்கொன்று, சடலத்தை ஏரியில் போட்டது விசாரணையில் உறுதியானது.
மாணவியின் தந்தை பிரகாஷ், 40, தாய் காமாட்சி, 35, ஆகியோரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில், 25 முதல், 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், அழுகிய நிலையில் சாக்கடை கால்வாயிலிருந்து நேற்று மாலை மீட்கப்பட்டது. பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு, காயங்கள் உள்ளன.
அதனால், அப்பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து, கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
எம்.பி., நடத்திய தர்ணா மணல் கடத்தியவர் கைது
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 12ல் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜா, நன்செய் இடையாறை சேர்ந்த சேகர் ஆகிய இருவரையும் கைது செய்யக்கோரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி., சின்ராஜ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம், டி.எஸ்.பி., சங்கீதா, 'மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். மணல் திருடியவர்களை கைது செய்கிறேன்' என, உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, தனிப்படை அமைத்து மணல் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராஜா, 38, மினி ஆட்டோவில் காவிரி ஆற்றில் இருந்து மணல் திருடி சென்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்து பசுவிற்கு அளித்தவர் கைது
திருப்பத்துார்: திருப்பத்துார், பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு, 43; இவர், தன் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து, அதை தான் வளர்க்கும் பசுவிற்கு தீவனமாக அளித்து வந்தார்.
இது குறித்த புகாரை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'வீட்டின் பின்புறம் புற்களை வளர்த்து பசுவிற்கு தீவனமாக கொடுத்து வருகிறேன். அதில், ஒரு செடி வளர்ந்து வந்தது.
அது கஞ்சா செடி என எனக்கு தெரியாது. புல்லை தீவனமான பசுவிற்கு கொடுக்கும் போது, அதையும் சேர்த்து கொடுத்தேன். மற்றபடி வேறு எதுவும் தெரியாது' என்றார்.
போலீசார் அதை ஏற்க மறுத்து, பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
9 வயது சிறுமி பலாத்காரம் மேஸ்திரிக்கு 25 ஆண்டு சிறை
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சிந்தகணவாயை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சுரேஷ்குமார், 39. இவர், 2017, மே, 24ம் தேதி, 9 வயது சிறுமியை கடத்திச் சென்று அப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோவில் கைது செய்தனர். வழக்கு, வேலுார் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி கலைப்பொன்னி, நேற்று முன்தினம் மாலை சுரேஷ்குமாருக்கு, 25 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும், 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
மருத்துவக்கழிவுகளை கொட்ட வந்த வேனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
நாகர்கோவில்:கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் கொட்ட வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவில் இருந்து இறைச்சி ,மீன் மற்றும் மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொட்டிச்செல்கின்றனர். இதனால் பல சாலைகளிலும் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அதிகாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் கொட்டி சென்று விடுகின்றனர்.
இவ்வாறு நேற்று அதிகாலை மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த வேனை பொதுமக்கள் துரத்தி சென்று குழித்துறை பழைய பாலத்தின் மேற்கு பகுதியில் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வேனை ஆய்வு செய்தபோது அதில் மருத்துவக் கழிவுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வேன் பறிமுதல் செய்யப்பட்டதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.
முன்விரோதத்தில் வாலிபர் கொலை
திருநெல்வேலி: களக்காடு அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக மூவரை போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பெருமாள்குளத்தை சேர்ந்தவர் ஜான்சன் 30. அங்கு பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு கோயில்ராஜ் என்பவருக்கும் சம்பத்ராஜா என்பவருக்கும் இடையே தகராறு நடந்தது.
இதில் ஜான்சன் கோயில்ராஜ்க்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதனால் சம்பத் ராஜா தரப்பினர் ஜான்சன் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் ஜான்சன் 30, அவரது தம்பி ஆல்பர்ட் ஜெயக்குமார் 23, ஆகியோர் பீடி கம்பெனி முன்பாக நின்ற போது அங்கு வந்த சம்பத்ராஜா, டாலி, பிரைட்சன் ஆகியோர் ஜான்சனையும், ஆல்பர்ட் ஜெயக்குமாரையும் அரிவாளால் வெட்டி இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட ஆல்பர்ட் ஜெயக்குமார் இறந்தார். ஜான்சன் சிகிச்சையில் உள்ளார். களக்காடு போலீசார் மூவரை தேடுகின்றனர்.
காதல்ஜோடியிடம் நகை பறிப்பு போலீஸ்காரர் மீது வழக்கு
தூத்துக்குடி: துாத்துக்குடி கடற்கரையில் காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பூங்காவில் சில தினங்களுக்கு முன்ஒரு காதல் ஜோடி நெருக்கமாக இருந்தது. அங்கு வந்த ஒருவர் அக்காட்சியை அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவர்களிடம் காண்பித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பெண் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகையை பறித்துச்சென்றார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாலிபர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது அங்கு நகைபறிப்பில் ஈடுபட்டது துாத்துக்குடி பூபாலராயபுரத்தை சேர்ந்த ரெனீஸ் பெர்னான்டோ என்பதும், அவர் 2021 முதல் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீசாக பணிபுரிவதும் தெரியவந்தது. அவர் மீது மிரட்டி நகை பறித்த வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடுகின்றனர்.
அக்காவை கொன்ற தம்பி கைது
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். மகள் சுபாவேணி 21,க்கும் அய்யனார் குளத்தை சேர்ந்த கருப்பசாமிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடால் சுபாவேணி குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். சுபாவேணி அடிக்கடி அலைபேசியில் பேசியபடி இருந்தார். நேற்று முன்தினம் மாலை சுபா வேணி போனில் பேசியதால் ஆத்திரமுற்ற 16 வயது தம்பி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். ஆலங்குளம் போலீசார் நேற்று சிறுவனை கைது செய்தனர்.
மாஜி முதல்வர் மகள் கவிதாவுக்கு 7 நாள் ஈ.டி., காவல்
புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குப் பதிவு
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனையில், 2021 - 22ம் ஆண்டு புதிய கொள்கை வகுக்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், சி.பி.ஐ., இதுகுறித்து விசாரித்து வருகிறது. இதில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில், டில்லி ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயரும் இடம் பெற்று உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் நிறைவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள், டில்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கருப்பு தினம்
அதன்பின் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் நேற்று, கவிதாவை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் கவிதாவை கைது செய்துள்ளனர்; இதன் வாயிலாக, அவர்கள் சட்டத்தை விட மேலானவர்கள் என நினைக்கின்றனர். இது ஒரு கருப்பு தினம்,'' என வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியுள்ளதுடன், சாட்சியங்களிடம் இருந்து வாக்குமூலங்களும் பெறப்பட்டு உள்ளன.
அவ்வாறு இருக்கையில், இவ்வழக்கில் இருந்து அவரை விடுவித்தால், சாட்சியங்களை கலைக்கும் அபாயம் உள்ளது. எனவே, அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், கவிதாவை வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “சட்ட விரோதமாக என்னை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்; நீதிமன்றம் வாயிலாக இந்த வழக்கில் இருந்து விடுபட போராடுவேன்,'' என்றார்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார். இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தன் வழக்கறிஞர்களுடன் கெஜ்ரிவால் ஆஜரானார். விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா பிறப்பித்த உத்தரவில், ''குற்றம் ஜாமினில் வரக்கூடியது என்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கெஜ்ரிவால் தரப்பு, ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும்,'' என குறிப்பிட்டுள்ளார்.

